காரியாபட்டி, சாத்தூரில் பலத்த மழை


காரியாபட்டி, சாத்தூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 15 April 2021 8:53 PM GMT (Updated: 15 April 2021 8:53 PM GMT)

காரியாபட்டி, சாத்தூரில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாத்தூர், 
காரியாபட்டி, சாத்தூரில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பலத்த மழை 
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் அதிகமாக அடித்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிேய வர முடியாமல் அவதிப்பட்டனர். 
இந்தநிலையில் சாத்தூர், வெங்கடாசலபுரம், மேட்டமலை, சின்னகமன்பட்டி, சிந்தப்பள்ளி, இருக்கன்குடி, அம்மாபட்டி, அமீர்பாளையம், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, நத்தத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிரமம் 
சாத்தூர் நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. 
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகள் மழைநீரில் மேடு, பள்ளம் தெரியாமல் அவதிப்பட்டனர். சாலைகளில் மழைநீர் வடிய வழி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காரியாபட்டி 
அதேபோல காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, முடுக்கன்குளம், பனைக்குடி, நரிக்குடி போன்ற பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.  இதனால் கண்மாய்களுக்கும், ஊருணிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தற்போது விவசாயிகள் தங்களது நிலங்களில் பருத்தி, நெல், கடலை போன்றவை பயிரிட்டுள்ளனர்.  இந்த மழை விவசாயத்திற்கு நல்லது என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கூறினர். சித்திரை மாதத்தின் முதல் தேதியிலேயே மழை தொடங்கியதால் விவசாயிகள் தங்களது நிலங்களை மகிழ்ச்சியுடன் உழவு செய்து, பணிகளை தொடங்கி விட்டனர்.

Next Story