ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவரை துரத்திய ஒற்றை யானை
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவரை ஒற்றை யானை துரத்தியது.
தாளவாடி
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தவரை ஒற்றை யானை துரத்தியது.
கடும் வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அலைகின்றன.
இதற்காக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன. அதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களையும் யானைகள் துரத்துகின்றன.
துரத்தியது
இந்தநிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு யானை நின்றுகொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு மோட்டார்சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காரப்பள்ளம் அருகே வந்த அவரை ரோட்டு ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த யானை திடீரென துரத்தியது. அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றார். அப்போது எதிர் திசையில் ஒரு கார் வந்தது. அதனால் யானை மோட்டார்சைக்கிளில் சென்ற வரை துரத்தாமல் விட்டுவிட்டு மீண்டும் ரோட்டு ஓரத்தில் வந்து நின்றுகொண்டது.
அச்சம்
ரோட்டு ஓரம் யானை நிற்பதை பார்த்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் தொடர்ந்து செல்லவில்லை. பயத்தில் அப்படியே சற்று தூரத்தில் நின்றுகொண்டார்கள். சுமார் 15 நிமிடம் யானை அங்கேயே நின்றது. ஒரு சிலர் செல்போனில் அதை படம் பிடித்தார்கள். அதன்பின்னர் யானை தானாக அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்தே வாகனங்கள் செல்ல தொடங்கின. மோட்டார்சைக்கிளில் வந்தவரை யானை துரத்திய சம்பவத்தை அறிந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
Related Tags :
Next Story