ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விலை குறைவால் விவசாயிகள் கவலை- 2 மாதத்தில் ரூ.2 ஆயிரம் சரிவு
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 2 மாதத்தில் ரூ.2 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 2 மாதத்தில் ரூ.2 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளது.
மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய 4 இடங்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கும்.
தேசிய விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகைக்காக கடந்த 2-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து 13 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் மஞ்சள் ஏலம் தொடங்கியது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக 6 ஆயிரத்து 811 -க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 659-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 399-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 899-க்கும் விற்பனை ஆனது.
ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 909-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 699-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 391-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 899-க்கும் ஏலம் போனது.
கூட்டுறவு சங்கம்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 469-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து152-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 333-க்கும் விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 902- க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 459-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 459-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 619-க்கும் ஏலம் போனது.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
தொடர் விடுமுறைக்குப்பின் இன்று (அதாவது நேற்று) மஞ்சள் ஏலம் தொடங்கி உள்ளது. மஞ்சள் வரத்து சராசரியாக இருந்தபோதும், விலை உயரவில்லை.
இதனால் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வரலாமா? வேண்டாமா? என்ற கவலையில் உள்ளனர்.
ரூ.2 ஆயிரம் குறைவு
நிஜாமாபாத்தில் புதிய மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும் பஸ்மத், நாம்தேட், ஹங்கேலி, மராட்டியம் ஆகிய பகுதிகளில் 20 சதவீதம் புதிய மஞ்சள் வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரம் முதல், ரூ.8 ஆயிரத்து 600 வரை விற்பனையாகி உள்ளது.
கடந்த 2 மாதங்களை ஒப்பிடுகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில், விவசாயிகள் எந்த அளவு மஞ்சள் சாகுபடி செய்கிறார்கள் என்பதற்கு ஏற்ப, விலை நிலவரம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story