இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் சுனாமி அலை போல கொரோனா தாக்குதல் - ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு


இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் சுனாமி அலை போல கொரோனா தாக்குதல் - ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
x
தினத்தந்தி 16 April 2021 4:59 AM IST (Updated: 16 April 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சுனாமி அலை போல கொரோனா தாக்கி உள்ளது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியப்பெருங்கடலில் 2004-ம்ஆண்டு, டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய சுனாமி அலைகளும் இதுவரை உலகம் கண்டிராததாக அமைந்தது. ஆழிப்பேரலைகள் மனிதர்களை, கொத்து கொத்தாக சுருட்டிக்கொண்ட துயரம் அப்போது நிகழ்ந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சுனாமி அலைகளால் வாரிச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அதே போன்றதொரு தாக்குதலை இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நடத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இதுவரை இந்தியாவில் இல்லாத அளவில், நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், 2 லட்சத்து 739 பேரை இந்த கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா ருத்ரதாண்டவமாடி வருகிற மராட்டிய மாநிலத்தில் மட்டுமே நேற்று 58 ஆயிரத்து 952 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. டெல்லியில் 17 ஆயிரத்து 282 பேருக்கு இந்த வைரஸ் தொற்று 24 மணி நேரத்தில் தாக்கி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ள முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

நேற்று நாடு முழுவதும் கொரோவால் 1,038 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினத்துடன் (1,027) ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்றே அதிகம்.

நேற்று பலியான 1,038 பேரில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 278 பேர் அடங்குவார்கள். சத்தீஷ்காரில் 120, டெல்லியில் 104, குஜராத்தில் 73, உத்தரபிரதேசத்தில் 67, பஞ்சாப்பில் 63, மத்திய பிரதேசத்தில் 51 பேர் இறந்துள்ளனர்.

நேற்று அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மட்டுமே கொரோனா உயிர்ப்பலியில் இருந்து தப்பி உள்ளன.

இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம், 1.23 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சை பெற்று வந்ததின் பலனாக நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 528 பேர் நலம் பெற்று, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 564 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 39 ஆயிரத்து 624 பேர் நலம் பெற்று வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில், டெல்லியில் 9,952 பேர், சத்தீஷ்காரில் 4,633 பேர், உத்தரபிரதேசத்தில் 4,517 பேர், கர்நாடகத்தில் 4,364 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நலம் பெற்றனர்.

இந்தியாவில் கொரோனாவில் நலம்பெற்றவர்கள் விகிதம், 88.31 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 36-வது நாளாக நேற்று அதிகரித்தது. குறிப்பாக ஒரே நாளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 173 பேர் புதிதாக சிகிச்சையில் சேர்ந்தனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 14 லட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 10.46 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 லட்சத்து 84 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 415 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும். இதுவரையில் 11 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி திருவிழாவால் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைச்சுத்தம் பராமரித்தல் ஆகிய 3 செயல்களும் கவசமாக கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story