உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு - பாதுகாக்க கோரிக்கை


உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு - பாதுகாக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 10:49 AM IST (Updated: 16 April 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் மண்ணில் புதைந்து கிடக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கை தமிழக தொல்லியல்துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

உத்திரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முள்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு ஒன்று இருப்பதை கண்டறிந்தோம். 3 வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.

பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டுக்கும் மருத்துவத்துக்கும் கல்செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டுக்கும் கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெருவிளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டி தந்திருக்கின்றன.

ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தினர் உடல் நலம் பெற வேண்டி கோவிலுக்காகவோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் பொதுமக்களும் தானமாக பெற்றனர். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு, யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டனர்.

அதன்படி இந்த செக்கில் 3 வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சி காலத்தில் கலைவாணிகன் என்பவர் இந்த கல்செக்கை ஊருக்கு தானமாக வழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த அரிய வகை கல்செக்காகும். இந்த கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்று அழைக்கப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே கல்வெட்டுகளுடன் கூடிய செக்கு என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

1923-ம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மண் மேட்டில் முள்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது.

இயற்கை சீற்றங்களால் விரைவில் முழுமையாக புதைந்து போய் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.

எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கொற்றவை ஆதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story