படுக்கை தட்டுப்பாட்டால் நாற்காலியில் அமர வைத்து கொரோனா நோயாளிக்கு சிகிச்சை
கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அங்குள்ள அரசு மற்றும் தனியாரை சேர்ந்த 74 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கல்யாண் மேற்கு பகுதியில் உள்ள ருக்மணி பாய் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு படுக்கை இல்லாததால் அவரை நாற்காலியில் அமரவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்.
இது பற்றி கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் டாக்டர் விஜய் சூர்யவன்சி கூறியதாவது:-
நாங்கள் நோயாளிகளின் உயிரை காப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். படுக்கைகளின் எண்ணிக்கை பற்றாக்குறை இல்லை. நோயாளிகளுக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. இதனை எனது தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணிக்குழுவினர் நேரடியாக சென்று மருத்துவர்களை சந்தித்து குறைபாடுகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.