புதுச்சேரி எல்லையில் புதிய கட்டுப்பாடுகள்; அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்து கோர தாண்டவமாடியது.
2-வது அலை தீவிரம்
புதுவையிலும் தொற்று பாதிப்பு தீவிரமானதை தொடர்ந்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து பாதிப்பு கட்டுக்குள் வந்தது.ஆனால் அந்த நிம்மதியை சீர்குலைக்கும் வகையில் கடந்த 2 மாதங்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒற்றை இலக்கத்தில் சரிந்த தினசரி தொற்று பாதிப்பு பல மடங்காக அதிகரித்தது. கடந்த சில நாட்களாக உயிர்ப்பலியும் பதிவாகி வருகிறது.அந்த வகையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து நேற்றைய நிலவரப்படி 413 ஆக உள்ளது. புதுவையில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதாக
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக கவசம் அணிவது பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பின்பற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தீவிர நோய் பாதித்தவர்கள் என முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.தற்போது மத்திய அரசு அறிவுறுத்தலின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புதுவை மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்காக மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு மற்றும் சுகாதார அமைப்புகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் கவர்னர் மாளிகையில் நேற்று இரவு கொரோனா மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த பிரகாஷ் மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன் மற்றும் துணை செயலாளர்கள், இயக்குனர்கள், தனியார் மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
படக்காட்சிகள்
கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் அருண் கலந்து கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி திருவிழா செயல்பாடுகள், கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை படக்காட்சிகள் மூலம் விளக்கி கூறினார்.கூட்டத்தில், புதுவையில் இதுவரை சுமார் 80 ஆயிரம் பேருக்கும், தடுப்பூசி திருவிழாவில் 5 நாட்களில் 53 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை விரிவுபடுத்தி 100 சதவீதம் இலக்கை அடைய வேண்டும். இதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது, 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு கவனம் செலுத்துவது, கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, தேவைக்கேற்ப மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மீண்டும் இ-பாஸ் முறை
மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்துவது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஏற்கனவே இருந்ததுபோல் மீண்டும் இ-பாஸ் முறையை கொண்டு வருவது, வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா சான்று கட்டாயம், உடல் வெப்ப பரிசோதனைக்குட்படுத்துவது என்பது பற்றியும் அதிகாரிகள் விவாதித்தனர்.
இதுபோன்ற மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதே வேளையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
Related Tags :
Next Story