கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி


கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 April 2021 8:05 PM IST (Updated: 16 April 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி

கோவை

கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் அருண் விக்னேஷ்.  இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.


இவர், கல்லூரி முடிந்து கடந்த 1-7-2011-ம் ஆண்டு அரசு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் பஸ்சின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். 

அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால் அருண்விக்னேஷ், எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் சுயநினைவை இழந்தார்.

இது குறித்த வழக்கு கோவை மாவட்ட மோட்டார் வாகன சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

விபத்தில் சுயநினைவை இழந்த  அருண் விக்னேசின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து ஜெயபால் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, இழப்பீடு வழங்காத தால் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். 

அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி முதல்கட்டமாக சிவானந்தா காலனி பஸ்நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ் ஒன்று ஜப்தி செய்யப்பட்டு, கோவை கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகும் நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 

அதில் மேலும் ஒரு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி கே.முனிராஜா உத்தரவிட்டார். இதையடுத்து காந்திபார்க் பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு சொகுசு பஸ் ஒன்று ஜப்தி செய்யப்பட்டு, கோவை கோர்ட்டு அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தீபக்குமார் ஆஜரானார்.


Next Story