மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பணிக்கு பிறகு, தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தந்தார்.
கொடைக்கானல்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பணிக்கு பிறகு, தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தந்தார்.
மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து அவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு மதியம் வருகை தந்தார்.
மு.க.ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, பேரன், பேத்திகள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களுக்கு கொடைக்கானல் நகர தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான முகமது இப்ராகிம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி டார்லிங் அஜ்மல்கான் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
3 நாட்கள் ஓய்வு
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இங்கு 3 நாட்கள் தங்கி மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க உள்ளதாக தி.மு.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல் வளாகத்திற்குள் வெளிநபர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தி.மு.க.வினர் ஓட்டலுக்கு வெளியே நின்றபடியே அவரை வரவேற்றனர். அப்போது முககவசம் அணிந்தபடி வந்த மு.க.ஸ்டாலின், கட்சியினரை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, ஓட்டலுக்குள் ஓய்வுக்காக சென்றார்.
Related Tags :
Next Story