வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 43 குழுக்கள்


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை  கண்காணிக்க 43 குழுக்கள்
x
தினத்தந்தி 16 April 2021 9:50 PM IST (Updated: 16 April 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 43 குழுக்கள் அமைத்து தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி: 


கண்காணிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஒரே வீட்டிலோ அல்லது ஒரே தெருவிலோ 3 பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. 

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சுமார் 24 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.


அதுபோல், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இதனால், தேனி மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

43 குழுக்கள்
ஒன்றிய அளவிலும், நகராட்சி, பேரூராட்சி அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

ஒவ்வொரு குழுவிலும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள், போலீசார், வருவாய்த்துறையினர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.


அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்டிப்பட்டிக்கு 3 கண்காணிப்பு குழுக்களும், கடமலை-மயிலை, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஒன்றியங்களுக்கு தலா 2 குழுக்களும், கம்பத்துக்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், 6 நகராட்சிகள், 21 பேரூராட்சி பகுதிகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

மாவட்டத்தில் மொத்தம் 43 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் விவரங்களை கண்டறிந்து, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். 

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் அவர்களது வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் தடுக்க வேண்டும். 

இந்த குழுவில் உள்ளவர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story