கப்பலூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களை நிறுத்தி போராட்டம்


கப்பலூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களை நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 16 April 2021 10:02 PM IST (Updated: 16 April 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கப்பலூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களை 2 மணி நேரம் நிறுத்தி வாகன ஓட்டிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

திருமங்கலம்,ஏப்
கப்பலூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களை 2 மணி நேரம் நிறுத்தி வாகன ஓட்டிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
கப்பலூர் சுங்கச்சாவடி
திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று கப்பலூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமங்கலம் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் கனரக வாகனங்களை அதன் ஓட்டுனர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியின் நடுவே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
போராட்டத்தின்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்தது. சுங்கச்சாவடியின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாயினர்.
பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து 2 தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் வாகனங்களுக்கு முழு கட்டண விலக்கு இருக்கும் நிலையில் அவ்வப்போது கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் மிரட்டுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே அரசு இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story