வால்பாறை நகராட்சி ஆணையாளர் மீது வழக்குப்பதிவு


வழக்குப்பதிவு
x
வழக்குப்பதிவு
தினத்தந்தி 16 April 2021 10:26 PM IST (Updated: 16 April 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை நகராட்சி ஆணையாளர் மீது வழக்குப்பதிவு

வால்பாறை

நகராட்சி அலுவலகத்தில் சோதனை

வால்பாறை நகராட்சி ஆணையாளராக பவுன்ராஜ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய பவுன்ராஜ், கலெக்டர் நாகராஜன் உத்தரவின்பேரில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், வால்பாறை நகராட்சி ஆணையாளர் கூடுதல் பொறுப்பை கவனிக்க உத்தரவிடப்பட்டது.

ஆணையாளர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நேற்று 2--வது நாளாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் தலைமையில் ஒரு குழுவும், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நகராட்சி தணிக்கை குழுவினர் மற்றொரு குழுவும் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆணையாளர் பவுன்ராஜ் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு -408 (அரசு ஊழியரின் நம்பிக்கை மோசடி) 420 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

ரூ.15.62 கோடிக்கு முறைகேடு

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வால்பாறை நகராட்சி ஆணையாளராக பதவி வகித்த பவுன்ராஜ் நகராட்சி பணத்தை விதிமுறைகளை பின்பற்றாமல் செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் பல்வேறு காண்டிராக்டர்கள் பெயர்களில் டெண்டர் அட்வான்ஸ் என்ற பெயரில் விதிமுறைகளை மீறி பணத்தை எடுத்துள்ளார். 

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. 

அதன்பேரில் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பவுன்ராஜ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர் அட்வான்ஸ் என்ற பெயரில் காசோலைகளை வழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பிற்பகல் 3 மணியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. ஆனால் பவுன்ராஜ் அன்று ரூ.ஒரு கோடிக்கு டெண்டர் அட்வான்ஸ் என்ற பெயரில் காசோலை வழங்கியுள்ளார்,

 கடந்த நிதி ஆண்டான 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.15 கோடியே 62 லட்சத்துக்கு நகராட்சி நிதியை விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடாக பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் அளித்த முறைகேடு புகாரின் பேரில் கடந்த 10-ந் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

இதற்கிடையில் பவுன்ராஜ் சோதனை நடந்த மறுநாளில் இருந்து விடுமுறையில் சென்றுள்ளார். இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

Next Story