வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதியன்று 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் அனைத்தும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னேற்பாடு பணிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சி.சி.டி.வி. கேமரா வசதி, தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மைய அறை, தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசியல் கட்சி முகவர்கள் அமருவதற்கான இருக்கை வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ குழுவினருடன் கூடிய மருத்துவ அறைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி வரை வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திண்டிவனம் அனு, விழுப்புரம் அரிதாஸ், திருக்கோவிலூர் சாய்வர்தினி, செஞ்சி ரகுகுமார், வானூர் சிவா, விக்கிரவாண்டி அறிவுடைநம்பி, மயிலம் பெருமாள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story