குடியாத்தம் அருகே வனத்துறையினரை தாக்க முயன்ற காட்டு யானைகள்


குடியாத்தம் அருகே வனத்துறையினரை தாக்க முயன்ற காட்டு யானைகள்
x
தினத்தந்தி 16 April 2021 10:48 PM IST (Updated: 16 April 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே வனத்துறையினரை தாக்க முயன்ற காட்டு யானைகள்

குடியாத்தம்

குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள சைனகுண்டா, தனகொண்டபல்லி, மோடிகுப்பம் வலசை, கொட்டமிட்டா, ஆம்பூராம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் தினமும் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து மா மரங்கள், வாழை மரங்கள், நெற்பயிர், கேழ்வரகு பயிர்களை தொடர்ந்து நாசப்படுத்தி வருகிறது. வனத்துறையினரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் அந்த யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இருப்பினும் யானைகள் கூட்டம் தினமும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் 2 குட்டிகள் உள்பட 10 யானைகள் கொட்டமிட்டா பகுதியில் மாந்தோப்புக்குள் புகுந்து மா, வாழை மரங்களை நாசம் செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனவர் மாசிலாமணி தலைமையில் வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், வனராஜ், சபரி, ஆனந்தராஜ் உள்ளிட்ட 8 பேர் சென்று யானைகள் கூட்டத்தை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அப்போது திடீரென ஒரு யானை வனத்துறையினரை தாக்க விரட்டி வந்துள்ளது. இதனால் வனத்துறையினர் 8 பேரும் தப்பி ஓடி உயிர் பிழைத்துள்ளனர். இதனிடையே பகலில் கொட்டமிட்டா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை மோர்தானா வனவர் நேதாஜி தலைமையில் வனத்துறையினர் நேற்று 4 மணி நேரம் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Next Story