இரணியூர் கோவிலில் சிலைகள் மாயம்
இரணியூர் கோவிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிகப் பழமையான கோவிலாகும். இரண்யனை சம்ஹாரம் செய்து தோஷம் நீங்க சிவபெருமான் அருளிய தலம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். கி.பி.713- ம் ஆண்டில் காருண்ய பாண்டிய மன்னர்களினால் கற்சிற்பக் கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில் 1941-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் ஊர் நகரத்தார்களால் தற்போது உள்ள இடத்தில் ஆட்கொண்டநாதர் திருக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. தற்போது காரைக்குடி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் கோவில் செயல் அலுவலர் சுமதி, 1948-ம் ஆண்டு வருடத்திய சொத்து பதிவேட்டை வைத்து கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்ததில் சோமஸ்கந்தர், ஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், தனி அம்பாள், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, நித்திய உற்சவம் சுவாமி, நித்திய உற்சவ அம்பாள், ஆகிய பழமையான 8 சிலைகள் மாயமாகி இருந்ததை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து செயல் அலுவலர் சுமதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை கூடுதல் இயக்குனர் அபய் குமார்சிங் மற்றும் காவல்துறை தலைவர் கணேசமூர்த்தி உத்தரவின் பேரில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Related Tags :
Next Story