கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடக்கம்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது
கரூர்
பொதுத்தேர்வு
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு வழிகாட்டல்களை பின்பற்றி செய்முறை தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி கொரோனா விதிகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 116 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்106 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது.
முக கவசம்
செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தும், உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் ஒரு பிரிவு மாணவர்கள் தேர்வை முடித்து வெளியே வரும் வரை மற்றொரு பிரிவு மாணவர்கள் காத்திருப்பு அறையில் இருந்தனர்.
இதேபோல் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். செய்முறை தேர்வின்போது ஆய்வகத்தின் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆய்வகங்களின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த தேர்வில் மொத்தம் 10,752 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story