குமரியில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு தொடங்கியது


குமரியில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 17 April 2021 12:22 AM IST (Updated: 17 April 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலுக்கு மத்தியில் குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ,மாணவிகளுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
கொரோனா பரவலுக்கு மத்தியில் குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ,மாணவிகளுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  கபீர் ஆய்வு செய்தார்.
செய்முறைத் தேர்வு
குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்றன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்திலும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வு எழுதினர்.
184 பள்ளிகளில் நடக்கிறது
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளில் இந்த செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற செய்முறைத் தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீர், மணலிக்கரையில் உள்ள மரிய கொரட்டி மேல்நிலை பள்ளி, வேங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, குலசேகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பைங்குளம் பத்ரேஸ்வரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சென்று ஆய்வு செய்தார். இதேபோல் செய்முறைத் தேர்வுகளை கண்காணிப்பதற்காக குமரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் வருகிற 19-ந் தேதி குமரி மாவட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Next Story