தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 550 படுக்கை தயார் தென்காசி கலெக்டர் சமீரன் தகவல்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 550 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 550 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
கபசுர குடிநீர்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை
கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்பு நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் வகையில், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் மருத்துவ பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களில் வருகிறவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி முலம் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கண்டறியப்பட்டால் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியானது தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் படுக்கைகள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு மையங்களாக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகளும், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கை வசதிகளும், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 35 படுக்கை வசதிகளும், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 67 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலருக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா பராமரிப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, நல்லமணி யாதவா கல்லூரி, பராசக்தி மகளிர் கல்லூரி, சங்கரன்கோவில் மகாத்மா வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் மொத்தம் 550 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தடையில்லா ஆக்ஸிஜன் வழங்குவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளான தென்காசி, கடையநல்லூர் ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் தலா 2 இடங்களிலும், சங்கரன்கோவிலில் ஒரு இடம் ஆகிய 7 இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, டாக்டர்கள் மேனகா, செல்வ கணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story