தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
ஏமாற்றம்
கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.
நேற்றுமுன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் பாதி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. மருந்து தீர்ந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பேரில் வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று 200 டோஸ் தடுப்பூசி மருந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட வந்து இருந்தனர். அவர்களில் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. ஊசி மருந்து தீர்ந்துவிட்டதால் நாளை (அதாவது இன்று) வருமாறு அங்கிருந்த நர்சுகள் தெரிவித்தனர். இதனால் நேற்று ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல மையங்களில் ஊசி மருந்து இல்லாததால் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. மாவட்டம் முழுவதும் நேற்று இதே நிலைதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 ஆயிரம் டோஸ் தடுப்பூசி
இது தொடர்பாக குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ண லீலாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் வேகம் அதிகரித்து இருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. தடுப்பூசி மருந்து கட்டுப்பாட்டின் காரணமாக குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஊசி மருந்து வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதன்பேரில் வேலூரில் இருந்து 3000 டோஸ் தடுப்பு ஊசி மருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வந்து சேரும். உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசி மருந்து வழங்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story