பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல நிற ஜரகண்டா பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து சென்றனர்


பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும்  நீல நிற ஜரகண்டா பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து சென்றனர்
x
தினத்தந்தி 17 April 2021 1:54 AM IST (Updated: 17 April 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல நிற ஜரகண்டா பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து சென்றனர்.

அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி. இது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
அதுமட்டுமின்றி இந்த மலைப்பகுதியில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கும் செடிகள் முதல் அரியவகை மரங்கள் பல உள்ளன. அவைகள் கோடை காலம்,    குளிர் காலம், பனி காலம் என அந்தந்த பருவ கால நிலைக்கு ஏற்ப பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 
இதில் பர்கூர் மலைப்பகுதியில் தேவர்மலையை அடுத்த ஒரு கோவில் அருகே மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதும் நீல நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. அந்த மரத்தில் இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் மிகவும் அழகாக பூத்து குலுங்குவதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து பார்த்து சென்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்தனர். 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர்மலை கோவில் பகுதிக்கு சுற்றுலாவாக வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மரக்கன்று ஒன்றை நட்டு சென்றார். இது ‘நீல ஜரகண்டா’ என்ற மரம் ஆகும். கோடை காலமான தற்போது இந்த மரத்தில் பூக்கள் நீல நிறத்தில் பூத்து குலுங்குகின்றன.
 மரம் முழுவதும் போர்வையை போர்த்தியது போன்று அழகாக இருப்பதால் இதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதன் பூக்கள் நீல நிற ஜரகண்டா பூக்கள் என அழைக்கப்படுகின்றன. பர்கூர் மலைப்பகுதியின் அழகை பறைசாற்றும் வகையில் இந்த மரம் உள்ளது       எங்களுக்கு  மகிழ்ச்சியை தருகிறது,’ என்றனர்.

Next Story