கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 21 April 2021 12:48 AM IST (Updated: 21 April 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 156 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27 ஆயிரத்து 829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 156 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் பெங்களூரு, பீகாரில் இருந்து கடலூர் வந்த 2 பேர், சென்னையில் இருந்து கடலூர், நெய்வேலி, நல்லூர் வந்த 5 பேர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 3 நோயாளிகள், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 59 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 87 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

3 பேர் பலி

நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 99 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 207 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை 305 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நேற்று 3 பேர் பலியானார்கள். இதன் விவரம் வருமாறு:-
கடலூரை சேர்ந்த 83 வயது முதியவர், பண்ருட்டியை சேர்ந்த 58 வயது பெண் ஆகிய 2 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையிலும், நெய்வேலி என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது.

கட்டுப்பாட்டு பகுதிகள்

கொரோனா பாதித்த 827 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 544 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 117 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் 40 ஆக உயர்ந்தது.

Related Tags :
Next Story