அரசு போக்குவரத்து கழக நேரப்பதிவாளர் அலுவலகத்துக்கு சீல்
வாடகை செலுத்தாததால் கடலூர் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக நேரப்பதிவாளர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலூர்,
கடலூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடை உள்ளது. இந்த கடையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலம் சார்பில் ஏலம் எடுத்து, அதை விசாரணை மற்றும் நேரப்பதிவாளர் அலுவலகமாக செயல்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த அலுவலகத்திற்கு மாதந்தோறும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை இதுவரை செலுத்தவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இது பற்றி நகராட்சி அதிகாரிகள் பல முறை கடலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், நோட்டீஸ் அனுப்பியும் வாடகையை செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விசாரணை மற்றும் நேரப்பதிவாளர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தவிர போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொழில்வரியையும் நகராட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிர்வாகம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story