கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனாவை கட்டுப்படுத்த கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
கடலூர், ஏப்.21-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும். கடைகள் அடைக்கப்படும் என்றும், அத்தியாவசிய தொழிற்சாலைகளை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது தவிர ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழக அரசு அறிவித்தபடி நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கால் இரவு 10 மணிக்கு பிறகு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு சிதம்பரத்திற்கும், புதுச்சேரிக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
பஸ்கள் குறைக்கப்பட்டன
இரவு 10 மணிக்கு பிறகு பஸ் நிலையத்தில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டது. முன்னதாக பகல் நேரத்தில் சென்னை, திருச்சி, சேலம் போன்ற தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் 20 சதவீதம் குறைக்கப்பட்டன. மற்றபடி நகர்ப்புற பஸ்கள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்டன.
இரவு நேரத்தில் பஸ் நிலையம் வந்த ஒரு சில பயணிகள் பஸ்கள் கிடைக்காததால் பஸ் நிலையத்திலேயே அதிகாலை வரை காத்திருந்தனர். திட்டக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். ஆனால் அவர்களை நாளைக்கு (இன்று) வருமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது.
இதனால் அவர்கள் கடலூர் பஸ் நிலையம் வந்தனர். ஆனால் அங்கிருந்து செல்ல பஸ் இல்லாததால் அவர்கள் பஸ் நிலையத்திலேயே தங்கி விட்டனர்.
கடைகள் அடைப்பு
பஸ் கிடைக்காத சிலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை இரு சக்கர வாகனங்களில வரவழைத்து சென்றதையும் பார்க்க முடிந்தது.
தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது தவிர இரவு 9 மணிக்கே கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களும் இயக்கப்படாததால் சாலைகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
எச்சரிக்கை
கடலூரில் பெரும்பாலான சாலைகளில் போலீசார் தடுப்பு கட்டைகளை வைத்து வாகனங்கள் செல்ல முடியாத படி அடைத்தனர். மீறி சென்ற வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்தும், அபராதம் விதித்தும் அனுப்பினர்.
ஆனால் அத்தியாவசிய தேவையான மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், பால் கடைகள் மட்டும் திறந்து இருந்தது. இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு நேர ஊரடங்கு முதல் நாள் என்பதால் ஒரு சில இடங்களில் இரவு 10.30 மணி வரை இரு சக்கர வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். அவர்களை போலீசார் துரத்தி விட்டனர்.
டாஸ்மாக் கடைகள்
இதேபோல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 9 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் சமூக இடைவெளியை பின்பற்றி மது பிரியர்கள் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
அதிலும் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் தான் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது. இரவு 10 மணி வரை இருக்கும் டாஸ்மாக் கடை இரவு 9 மணிக்கே மூடினாலும் கடைகளில் கூட்டம் குறைவாக தான் இருந்ததை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story