குமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது
குமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது. இதனால் நாகர்கோவில் பஸ் நிலையங்கள் மாலை நேரத்திலேயே வெறிச்சோடி கிடந்தன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது. இதனால் நாகர்கோவில் பஸ் நிலையங்கள் மாலை நேரத்திலேயே வெறிச்சோடி கிடந்தன.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்திலும் பரவல் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 198 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு வரையில் 130-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.
வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்
இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, கார் மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அரசும் மாவட்ட நிர்வாகமும் தெரிவித்திருந்தது.
அதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று பிற்பகலில் இருந்து சென்னை போன்ற தொலை தூரங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தும் பகுதி பஸ்கள் இன்றியும் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கக்கூடிய பஸ்கள் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டன. திருநெல்வேலி, களியக்காவிளைக்கு இரவு 8 மணியுடனும், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பஸ்கள் மாலை 6.45 மணியுடனும் நிறுத்தப்பட்டன. அதேபோல் மாவட்டத்துக்கு உள்ளாக இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் அனைத்து பஸ்களும் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பான அறிவிப்பு பலகையும் வடசேரி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன.
குறைவான பஸ்கள் இயக்கம்
மாலை மற்றும் இரவு நேரங்களில் திருப்பூர், கோவை, சேலம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் காலையிலேயே இயக்கப்பட்டன. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் தினமும் கொடைக்கானல் வரை இயக்கப்படும் பஸ் மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டது. தொலை தூரங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் அந்தந்த பகுதியில் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு வரும் வகையில் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்
இதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, கோவை, வேலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் குறைவான அளவு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. அதாவது தினமும் இயக்கப்படும் 70 பஸ்களில் நேற்று 21 பஸ்கள் மட்டுமே மேற்கண்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் கோவை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் நேற்று காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டன. திருச்சி செல்லும் பஸ்கள் மட்டும் 12.30 மணி வரை இயக்கப்பட்டது அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
கடைகள் அடைப்பு
தேநீர் கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் நேற்று இரவு 9 மணியுடன் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மூடப்படாத கடைகளையும் போலீசார் ரோந்து சென்று மூட செய்தனர். இதனால் நாகர்கோவில் நகரில் நேற்று இரவு 9 மணிக்கே கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது. மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் இன்றி சாலைகளும் வெறிச்சோடின. இதே நிலை குமரி மாவட்டம் முழுவதும் இருந்தது.
Related Tags :
Next Story