பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2021 8:18 PM GMT (Updated: 20 April 2021 8:18 PM GMT)

குளச்சலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14½ பவுன் நகைகள், ரூ.77 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

குளச்சல், 
குளச்சலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14½ பவுன் நகைகள், ரூ.77 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நகை பறிப்பு சம்பவங்கள்
குமரி மாவட்டத்தில் குளச்சல் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள், வீட்டின் கதவை உடைத்து திருட்டு போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் சாஸ்திரி மேற்பார்வையில், குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் சணல் குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் குளச்சல் லட்சுமிபுரம் சந்திப்பில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
நகை-பணம் மீட்பு
விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபத்தை சேர்ந்த அபிராம் (வயது 27), பரம்பை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (43) என்பது தெரியவந்தது. இவர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு, வீடுகளில் புகுந்து திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 14½ பவுன் திருட்டு நகைகள், ரூ.77 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். 
இதையடுத்து பிடிபட்ட 2 பேர் மீதும் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

Next Story