மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி


மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
x
தினத்தந்தி 21 April 2021 2:17 AM IST (Updated: 21 April 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே வேலை செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவர் இறந்தார். அவருடைய தந்தை கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

தா.பழூர்:

மாணவர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் கிராம பகுதிகளில் சிறுசிறு எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விஜயன்(வயது 20). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பட்டய படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த பாலன் என்பவரது இடத்தில் அசோகனும், விஜயனும் வயரிங் வேலைகள் செய்துள்ளனர்.
இரும்பு ஏணியில் நின்று...
அப்போது அங்குள்ள சிறிய கட்டிடத்தின் மேல் வயரிங் செய்ய இரும்பு ஏணியில் விஜயன் ஏறி வேலை செய்துள்ளார். ஏணி சாயாமல் இருக்க அசோகன், கீழே நின்று ஏணியை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது விஜயன் காலணி அணியாமலும், அசோகன் காலணி அணிந்தும் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஏணியின் கீழே இருந்த மின்சார வயர் வழியாக ஏணியில் மின்சாரம் பாய்ந்ததில் ஏணியின் மேல் நின்ற விஜயன் மயங்கி சாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசோகன் சத்தம் போட்டார். அதை கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மின்சாரத்தை துண்டித்து, விஜயனை மீட்டனர்.
சாவு
மேலும் அவரை உடனடியாக ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் அங்கு சென்று விஜயனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அசோகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டய படிப்பு முடிய இன்னும் 20 நாட்களே இருந்த நிலையில், விஜயன் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story