குழாயிடம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
வேணாநல்லூர் கிராமத்தில் குழாயிடம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
நூதன போராட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இருகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேணாநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சியின் 5 மற்றும் 6-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரியா குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குடிநீர் குழாய் முன்பு வந்தனர். அங்கு குடிநீர் குழாயை பார்த்து குடிநீரே வா... வா... என்று கூறி, குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை மனு
பின்னர் இது குறித்து தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story