கொரோனாவால் கொள்ளை போன மாணவர்களின் பொற்காலத்தை மீட்டு கொடுங்கள்-கவிஞர் வைரமுத்து பேச்சு


கொரோனாவால் கொள்ளை போன மாணவர்களின் பொற்காலத்தை மீட்டு கொடுங்கள்-கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 21 April 2021 2:22 AM IST (Updated: 21 April 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

புதிய திட்டமிடுதலுடன் கல்வி கற்பித்து கொரோனாவால் கொள்ளை போன மாணவர்களின் பொற்காலத்தை மீட்டு கொடுங்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்

மதுரை
புதிய திட்டமிடுதலுடன் கல்வி கற்பித்து கொரோனாவால் கொள்ளை போன மாணவர்களின் பொற்காலத்தை மீட்டு கொடுங்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
குயின்மீரா பள்ளி
மதுரை மேலக்கால் ரோட்டில் குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தற்போது சர்வதேச பள்ளிகள் சபையின் (சி.ஐ.எஸ்.) அங்கீகாரம் கிடைத்துள்ளது. உயர்தரமான கற்றல், உலக அளவில் சிறந்த மாணவர்களை உருவாக்குதல், சர்வதேச பாதுகாப்பு, தரங்களை சிறப்பாக பராமரித்தல் ஆகியவற்றிக்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 பள்ளிக்கு தான் இந்த விருது கிடைத்துள்ளது. 
அதில் தென் தமிழகத்தில் மதுரை குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அதற்கான பாராட்டு விழா நேற்று நடந்தது. பள்ளியின் தலைவர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் வரவேற்று பேசினார். பள்ளி இயக்குனர் சுஜாதாகுப்தன் முன்னிலை வகித்தார். இதில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தம், வக்கீல் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
சர்வதேச அங்கீகாரம்
விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மேலும் அவர் சர்வதேச பள்ளியின் சபை வழங்கிய அங்கீகார சான்றிதழை பள்ளியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரிடம் வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
குயின்மீரா பள்ளிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பது இந்த பள்ளிக்கு மட்டும் உரித்தானது அல்ல. தமிழ் மற்றும் தமிழனுக்கு உரியது. இந்த நேரத்தில் மிக முக்கியமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிக்கும் காலம் ஒரு அறைக்கூவல் விட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில் ஒரு பெரிய விடுபடுதல் நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் விடுபடுதல் என்பது ஏற்பட்டதில்லை. ஆனால் சரித்திரம் எந்த விடுபடுதலையும் ஏற்று கொள்வதில்லை.
 திட்டம் தீட்டுங்கள்
ஆனால் இந்த கொரோனா என்ற நிகழ்வு சரித்திரத்தில் ஒராண்டையே கழித்து விடச் சொல்லி வற்புறுத்துகிறது. 172 நாடுகளில் 100 கோடி மாணவர்கள் கல்வி இழந்து போய் இருக்கிறார்கள். இந்த 100 கோடி மாணவர்கள் தான் நாளைய எதிர்காலம். இவர்களில் தான் எத்தனை நியூட்டன், எடிசன் என்று தெரியாது. எனவே விடுபட்டு போன ஒரு வருடத்தில் எத்தனை ஆற்றல்கள் இந்த சமூகத்தை விட்டு ஒதுக்கி இருக்கின்றன என்பது நமக்கு தெரியாது. அதை எப்படி ஈடுகட்ட போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வி.
எனவே என்றைக்கு கொரோனா தீர்கிறதோ அன்றைக்கு கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்திற்கு மீட்டு கொடுக்க வேண்டியது தான் உலகத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஏற்று கொள்வதற்கு எல்லோரும் முயல வேண்டும். புதிய திட்டமிடுதலுடன் கல்வி கற்பித்து கொரோனாவால் இழந்த மாணவர்களின் பொற்காலத்தை எப்படி மீட்கலாம் என்பது குறித்து திட்டம் தீட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story