உளியால் குத்தி முதியவர் கொலை
ஒரத்தநாடு அருகே உளியால் குத்தி முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே உளியால் குத்தி முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவருடைய மகன் சூசைராஜ் (வயது 34). இவர், கடந்த 3 மாதங்களாக ஒரத்தநாட்டில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் வேலை செய்து வந்தார்.
சூசைராஜ், செல்வி என்ற பெண்ணுடன் ஒரத்தநாடு புதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சூசைராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சூசைராஜுக்கும்- செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
உளியால் குத்திக்கொைல
அப்போது அந்த வழியே சென்ற ஒரத்தநாடு புதூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(60), சூசைராஜிடம், ஏன் தகராறு செய்து பிரச்சினையை ஏற்படுத்துகிறாய்? என கேட்டார். இதனால் சூசைராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சூசைராஜ், தான் மறைத்து வைத்திருந்த உளியால் ராஜேந்திரனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சூசைராஜை பிடித்து அவரை அடித்து உதைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார், பொதுமக்களிடம் இருந்து சூசைராஜை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சூசைராஜை போலீசார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் ராஜேந்திரன் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சூசைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளியால் குத்தி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story