செங்கோட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
செங்கோட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் அண்ணா தெருவில் தனியார் கட்டிடத்தின் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்புதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதற்கான சாதனங்களை கொண்டு வந்து பணிகளை தொடங்க இருந்தனர். இதையறிந்த அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து அந்த ஊழியர்களிடம், இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும், செல்போன் கோபுரம் அமைக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்தி விட்டு, குடியிருப்பு இல்லாத வேறு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற்று அமைத்து கொள்ளுங்கள் என்று செல்போன் கோபுரம் அமைக்கும் ஊழியர்களிடம் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story