கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக தாக்கி வருவதால், பொதுமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அவசிய வேலையாக வெளியில் வந்தாலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரும்படியும் வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை
இதைத்தொடர்ந்து உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16ம்தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில் கடந்த 17ந்தேதி வரை 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றம்
அதன்பிறகு கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லை. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த கொரோனா தடுப்பூசி போடும் வார்டுக்கு முன்பகுதியில், கோவேக்சின் மருந்து கையிருப்பில் இல்லை என்று எழுதி சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உடுமலைஅரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி மருந்து எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில் அடுத்த மாதம் மே 1ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி மருந்து விரைவில் வந்துவிடும் என்றும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதேபோன்று உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் அங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லை. அங்கும் கொரோனா தடுப்பூசி மருந்து வருவதை பொதுமக்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
----------
உடுமலை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வார்டையும், அங்கு கோவேக்சின் மருந்து கையிருப்பில் இல்லை என்று எழுதி ஒட்டப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
===========
Related Tags :
Next Story