வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; 40 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் நிறுத்தம்


வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; 40 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 April 2021 7:24 PM IST (Updated: 21 April 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் 40 இடங்களில் நடந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் 100-ஐ தாண்டி செல்கிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட ராஜேஷ் லக்கானி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இதை அனைத்து துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஆஸ்பத்திரிகள், ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 46 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வாரம் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தன. இதில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்திற்கு வரவில்லை. மருந்து இருப்பு குறைவாக உள்ளது. எனவே 40 இடங்களில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுவதால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மருந்து இருப்பு குறைவாக உள்ளதால் இந்த முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு லட்சம் மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது. அவை வந்த பிறகு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றனர்.

Next Story