நீலகிரி மாவட்டத்தில் 27 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி


நீலகிரி மாவட்டத்தில் 27 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி
x
தினத்தந்தி 21 April 2021 7:24 PM IST (Updated: 21 April 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து 27 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளதால், ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், லோயர் பஜார், பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணிக்கு முன்பாக கடைகள் அடைக்கப்பட்டன. 10 மணிக்கு மேல் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் சாலைகள் வெறிச்சோடின.

மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாமல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காய்கறிகள், மளிகை பொருட்கள், டீசல், பெட்ரோல், மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் லாரிகள், வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. 

இது மட்டுமின்றி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் போலீசார் தடுப்புகள் வைத்து  தீவிர சோதனை நடத்தினர். அவசிய தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள 16 சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறும்போது, இரவு நேர ஊரடங்கையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து 27 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு  150 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Next Story