வேடசந்தூர் அருகே மாயமான புதுப்பெண் கள்ளக்காதலனுடன் பிடிபட்டார்


வேடசந்தூர் அருகே மாயமான புதுப்பெண் கள்ளக்காதலனுடன் பிடிபட்டார்
x
தினத்தந்தி 21 April 2021 7:42 PM IST (Updated: 21 April 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே திருமணமான 3 வாரத்தில் மாயமான புதுப்பெண், கள்ளக்காதலனுடன் திருப்பூரில் பிடிபட்டார்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே திருமணமான 3 வாரத்தில் மாயமான புதுப்பெண், கள்ளக்காதலனுடன் திருப்பூரில் பிடிபட்டார். 
புதுப்பெண் மாயம்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பாலசமுத்திரபட்டியை சேர்ந்தவர் சுகந்தி (வயது 21). இவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். 
இதற்கிடையே சுகந்திக்கும், அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பாண்டி (27) என்பவருக்கும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனால் நூற்பாலைக்கு வேலைக்கு செல்லாமல் சுகந்தி, கணவருடன் வசித்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுகந்தியை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தோகைமலை போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சுகந்தியை தேடி வந்தனர். 
இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (27) என்பவரை 19-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி கன்னியம்மாள் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பூரில் சிக்கினர்
போலீசார் முதற்கட்டமாக கார்த்தியின் செல்போன் எண்ணை வைத்து தேடியபோது, அவர் திருப்பூரில் இருப்பதாக சிக்னல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் திருப்பூர் சென்று கார்த்தியை கண்டுபிடித்தனர். அப்போது அவருடன் புதுப்பெண் சுகந்தியும் இருந்தார். 
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, கார்த்தியும், சுகந்தியும் ஒரே நூற்பாலையில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்துள்ளது. ஆனால் கார்த்திக்கு திருமணமானது குறித்து சுகந்திக்கு தெரியாமல் இருந்தது. இதற்கிடையே சுகந்திக்கு திருமணம் ஆன நிலையில், அவர் கணவருடன் சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். அப்போது அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்தி, திருப்பூர் சென்று ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி சுகந்தியை அழைத்துள்ளார். அதன்படி சுகந்தி, அவருடன் மாயமானது தெரியவந்தது. 
பேச்சுவார்த்தை
இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகந்தி தனது கணவர் பாண்டியுடன் செல்வதற்கு சம்மதித்தார். அதேபோல் கார்த்தி தனது மனைவி கன்னியம்மாளுடன் செல்ல சம்மதித்தார். இதையடுத்து இருதரப்பினரிடமும் கடிதம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் அனுப்பிவைத்தனர்.
திருமணமான 3 வாரத்தில் கள்ளக்காதலனுடன் புதுப்பெண் மாயமான சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story