காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு ஊட்டி நகர் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் வந்து செல்கின்றனர்.
இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கடைகள் நெருக்கமாக உள்ளது. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மேலும் தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வட்டங்களை குறிக்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்த தண்ணீர், சோப்பு அல்லது கிருமிநாசினி வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சி சார்பில் மார்க்கெட்டில் உள்ள பிரதான 3 நுழைவாயில்கள் வழியாக உள்ளே வருகிறவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்களது செல்போன் எண், எந்த பகுதியில் இருந்து வருகின்றனர், உடல் வெப்பநிலை அளவு ஆகிய விவரங்கள் பதிவேட்டில் குறிக்கப்படுகிறது.
உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பெரிய, சிறிய என 20 நுழைவுவாயில்கள் உள்ளன. ஆனால் 3 நுழைவுவாயில்களில் மட்டும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், மற்ற நுழைவாயில்கள் வழியாக வாடிக்கையாளர்கள் பலரும் வந்து செல்கின்றனர்.
எனவே அனைத்து நுழைவு வாயில்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கி காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story