மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி பலி
பந்தலூரில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி பலியானாள். அவளது தோழி படுகாயம் அடைந்தாள்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டாடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி ஆனந்த ஜோதி. இவர்களது மகள் கார்த்திகா(வயது 15). அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இதேபோன்று நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-4) பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருடைய மனைவி புனிதா. இவர்களது மகள் ஜீவபிரியா(10). இந்த நிலையில் நேற்று காலையில் ராமகிருஷ்ணன், ஆனந்தஜோதி, ரஞ்சித்குமார், புனிதா ஆகியோர் கடுக்காசிட்டி என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மதிய வேளையில் அவர்களுக்கு காத்திகா, ஜீவபிரியா ஆகியோர் உணவு கொண்டு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
உடனே அவர்கள் அருகில் தோட்டத்தில் பறித்த பச்சை தேயிலையை பாதுகாத்து வைக்கும் கொட்டகைக்குள் சென்று பதுங்கினர். எனினும் திடீரென அவர்களை மின்னல் தாக்கியது. இதனால் உடல் கருகிய அவர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சேரம்பாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு பாட்டவயலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது தோழியான ஜீவபிரியாவுக்கு, சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story