கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின் சென்னை சென்றார்
கொடைக்கானலில் 6 நாட்கள் தங்கி ஓய்வெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை கட்சி தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் 6 நாட்கள் தங்கி ஓய்வெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை கட்சி தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி, மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஓய்வெடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தார். அங்கு பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கி ஓய்வெடுத்தனர். மேலும் அவ்வப்போது நகர் பகுதியில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா இடங்களை பார்வையிட்டார்.
மேலும் அவர் தங்கியிருந்த ஓட்டலில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டார். அத்துடன் நட்சத்திர ஏரி, கூக்கால் ஏரி பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். மன்னவனூரில் உள்ள உரோம ஆராய்ச்சி மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
சென்னை சென்றார்
இந்தநிலையில் நேற்று அவர் சென்னைக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, பிற்பகல் 3 மணி அளவில் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்து தனது குடும்பத்தினருடன் 5 கார்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
மேலும் கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகே சாலையோரம் நின்றபடி வழியனுப்பி வைத்த தொண்டர்களை பார்த்ததும், காரை நிறுத்தி மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை பெற்றார். அத்துடன் அவர்களிடம் இருந்து சால்வையும் அவர் பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு மதுரைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றனர்.
Related Tags :
Next Story