வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்பட வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
வாக்கு எண்ணிக்கை
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடக்கிறது.
கொரோனா வைரஸ் 2-வது அலையாக உருவாகி வேகமாக பரவி வருவதால் வாக்கு எண்ணும் பணியையும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை
ஒவ்வொரு தொகுதியிலும் தலா 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மொத்தம் 68 மேற்பார்வையாளர்கள், 68 உதவியாளர்கள், 68 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 204 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கணினி மூலம் கலக்கல் முறையில் அவர்கள் பணிபுரிய உள்ள சட்டமன்ற தொகுதிகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சானிடைசர், முககவசம் போதிய அளவில் இருப்பு வைக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக தேனியில் ஒரு திருமண மண்டபத்தில் வருகிற 29, 30-ந்தேதிகளில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் பணியை பார்வையிடும் முகவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு என்ற அளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லாத நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அடையாள அட்டை
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வெவ்வேறு நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்படும்.
வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு மேஜைக்கும் இடையே 7 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் அலுவலருக்கும், வேட்பாளர்களின் முகவர்கள் நிற்கும் இடத்துக்கும் இடையே 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் சுற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story