கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணையின் நீர்மட்டம் குறைவு விவசாயிகள் கவலை


கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணையின் நீர்மட்டம் குறைவு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 21 April 2021 9:45 PM IST (Updated: 21 April 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, 

கோமுகி அணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக பொட்டியம், மல்லிகைப்பாடி, கல்படை ஆறுகள் வழியாக தண்ணீர் வரும். இவ்வாறு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தேக்கி வைத்து, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயத்துக்கு திறந்து விடுவார்கள். இதன் மூலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

விவசாயிகள் கவலை

அந்த வகையில் கடந்த ஆண்டு கல்வராயன் மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 44 அடியை எட்டியது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், கோடை வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென 34 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் அணை நீரை நம்பி 2-ம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
இதுகுறித்து கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கோமுகி அணையில் ஆண்டுதோறும் மீன் வளர்ப்புக்காக 15 அடி முதல் 20 அடி வரை நீரை பொதுப்பணித்துறையினர் சேமித்து வைப்பார்கள். எனவே என்னை போன்ற விவசாயிகள் நலன்கருதி இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீரை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

20 நாட்களுக்கு மட்டும் 

குறைந்து வரும் அணையின் நீர்மட்டம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோமுகி அணையில் இருந்து 2 பாசன வாய்க்கால்கள் மூலம் கடந்த 7 மாதங்களாக விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி, குறுவை சாகுபடி செய்தனர். தற்போது 2-ம் குறுவை சாகுபடி் செய்து வருகின்றனர்.
தற்போது அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்துள்ளதால் இன்னும் 20 நாட்களுக்கு பழைய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 50 கனஅடியும் புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 50 கனஅடியும் மட்டுமே திறக்க முடியும். எனவே கோமுகி அணை பாசன விவசாயிகள் தண்ணீர் திறப்புக்கு ஏற்றார்போல் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Next Story