வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை செலுத்தாமல் மோசடி


வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை செலுத்தாமல் மோசடி
x
வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை செலுத்தாமல் மோசடி
தினத்தந்தி 21 April 2021 9:53 PM IST (Updated: 21 April 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை செலுத்தாமல் மோசடி

கோவை 

சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாதிரியார் புகார்

கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. ஐக்கிய ஆலயத்தை சேர்ந்தவர் பாதிரியார் செர்சோம் ஜேக்கப். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 

கோவை சி.எஸ். ஐ.திருமண்டலத்துக்கு சொந்தமான 125 ஆலயங்களில் பாதிரியார்கள் உள்பட ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.


நான் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ. ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். எனது வருங்கால வைப்பு தொகை கட்டணத்தை முறையாக சி.எஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வந்தேன். 

எனது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சி.எஸ்.ஐ நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அதன் பொருளாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். அப்போது எனது கணக்கில் தொகை செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

ரூ.25 கோடி மோசடி

கடந்த 2005-ம் ஆண்டு முதல் இது வரை எனது கணக்கில் தொகை செலுத்தாமல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் மோசடி செய்துள்ளது. 

நான் கேட்டபின்புதான் 2019-ம் ஆண்டு புதிய கணக்கை தொடங்கி ரூ.45 ஆயிரம் மட்டும் செலுத்தியுள்ளனர். 

இதுபோன்று 125 ஆலயங்களிலும் இருந்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை ரூ.25 கோடி அளவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.

இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக முன்னாள் பிஷப், மற்றும் தற்போதைய பிஷப் திமோத்தி ரவீந்தர் பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிஷப் மீது வழக்குப்பதிவு

இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீசார் பிஷப் திமோத்தி ரவீந்தர், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ். பொருளாளர் செல்வகுமார் ஆகிய 4 பேர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சி.எஸ்.ஐ.பங்கு ஆலயங்களில் நடைபெற்ற இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து போலீசார் கூறும்போது, "தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story