இரவுநேர ஊரடங்கால் வேலூர் மண்டலத்தில் 95 அரசு பஸ்கள் நிறுத்தம், இரவுநேர ஊரடங்கால்
இரவுநேர ஊரடங்கு காரணமாக வேலூர் மண்டலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 95 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வேலூர்
இரவுநேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு சமயத்தில் பிற மாவட்டம், மாநிலத்துக்கோ அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படாது. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, தாம்பரம், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், ஈரோடு, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், வேலூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு பஸ்களின் நேரம் மாற்றப்பட்டது. விரைவு பஸ்கள் இரவு நேரத்துக்கு பதிலாக காலை வேளையில் இயக்கப்பட்டன. அதேபோன்று வேலூர் பழைய, புதிய பஸ் நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மாலை 6 மணிக்கு பின்னர் இயக்கப்படவில்லை. டவுன்பஸ்கள் மட்டும் இரவு 9 மணிவரை இயக்கப்பட்டன.
ரூ.25 லட்சம் வசூல் குறைவு
இரவுநேர ஊரடங்கு காரணமாக மாலை வேளையில் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாங்கள் செல்லும் ஊருக்கு பஸ் இல்லாததால் சிலர் அவதிக்கு உள்ளாகினர். ஊரடங்கு காரணமாக வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இரவு வேளையில் இயக்கப்பட்ட 95 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் டிக்கெட் கட்டண வசூல் குறைந்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மண்டலத்தில் இருந்து 629 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இரவுநேர ஊரங்கு காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 95 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் கொரோனா தொற்றுக்கு முன்பு ஒருநாளைக்கு ரூ.90 லட்சம் வரை டிக்கெட் கட்டணம் வசூலானது. தற்போது இரவுநேர ஊரடங்கு காரணமாக வழக்கத்தைவிட ரூ.25 லட்சம் டிக்கெட் கட்டண வசூல் குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story