பழனி அருகே திருமணமாகாமல் ஆசிரியைக்கு பிறந்த சிசுவை கிணற்றில் வீசி கொன்ற பாட்டி உள்பட 3 பேர் கைது
பழனி அருகே திருமணமாகாமல் ஆசிரியைக்கு பிறந்த சிசுவை கிணற்றில் வீசி கொன்ற பாட்டி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பத்துக்கு காரணமான காதலனும் சிக்கினார்.
பழனி:
பழனி அருகே திருமணமாகாமல் ஆசிரியைக்கு பிறந்த சிசுவை கிணற்றில் வீசி கொன்ற பாட்டி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பத்துக்கு காரணமான காதலனும் சிக்கினார்.
ஆசிரியை கர்ப்பம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் மணியன். அவருடைய மகள் மங்கையர்க்கரசி (வயது 29). ஆசிரியை. திருமணம் ஆகாத நிலையில் அவர் கர்ப்பம் ஆனார்.
இதனையடுத்து கடந்த 19-ந்தேதியன்று, அவருக்கு வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் மங்கையர்க்கரசிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மங்கையர்க்கரசி பரிதாபமாக இறந்தார்.
முறை தவறிய காதல்
இதுகுறித்து ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மங்கையர்கரசியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது மங்கையர்க்கரசியும், அதே பகுதியை சேர்ந்த அதிஷ்குமார் (25) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
ஆனால் மங்கையர்க்கரசிக்கு அதிஷ்குமார் தம்பி முறை என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
சிசு கொலை
இந்தநிலையில் மங்கையர்க்கரசி சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார். இதுபற்றி அறிந்ததும், மங்கையர்க்கரசியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். ஆனால் கரு வளர்ச்சி அடைந்ததால் கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து திருமணம் ஆகாமல் மகள் கர்ப்பம் அடைந்தது பற்றி வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய பெற்றோர், மங்கையர்க்கரசியை வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் தான், கடந்த 19-ந்தேதி மங்கையர்க்கரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டிலேயே வைத்து அவருக்கு உறவினர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு பிறந்த ஆண் சிசுவை கிணற்றில் வீச முடிவு செய்தனர்.
அதன்படி அந்த சிசுவை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தனர். இதற்கிடையே மங்கையர்க்கரசிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பழனி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
4 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் வீசி சிசுவை கொலை செய்ததாக மங்கையர்க்கரசியின் தாய் தங்கம் (55), அக்காள் கணேஷ்பிரியா (31), தம்பி காளிதாஸ் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மங்கயைர்க்கரசியின் காதலன் அதிஷ்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே கிணற்றில் இருந்து சிசுவை பிணமாக மீட்டனர். பின்னர் அதை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story