கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மீன் மார்க்கெட் செயல்படும் நேரம் மாற்றம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மீன் மார்க்கெட் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் எம்.ஜி. சாலையில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்போது வரை அந்த நகராட்சி திடலிலேயே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.
இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவா, நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் லாரிகள் மூலமாக மீன்கள் கொண்டு வரப்படும். இவை நள்ளிரவு நேரத்தில் கொண்டு வரப்படுவதால் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை இந்த மீன் மார்க்கெட் பரபரப்பாக இயங்கும்.
இந்த மீன்களை மொத்தமாக வாங்கிச்செல்ல சிறு வியாபாரிகள் பலர் நள்ளிரவு முதலே மீன் மார்க்கெட்டில் கூடுவார்கள். பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை செய்யப்படும். இதனால் இந்த மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் அதிகளவில் இருக்கும்.
செயல்படும் நேரம் மாற்றம்
இந்நிலையில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாகவும், இந்நோய் பரவலை முற்றிலும் தடுக்கும் விதமாகவும் அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மீன் மார்க்கெட் நள்ளிரவு நேரத்தில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையொட்டி மீன் மார்க்கெட் செயல்படும் நேரத்தை விழுப்புரம் நகர மொத்த மீன் வியாபாரிகள் சங்கத்தினர் மாற்றியமைத்துள்ளனர். இதுபற்றி சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக மீன் மார்க்கெட் முன்பு மாற்றியமைக்கப்பட்ட நேரம் குறித்த அறிவிப்பு விளம்பர பதாகையை வைத்துள்ளனர்.
அதாவது தமிழக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தின் காரணமாக திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் மீன் வியாபாரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் அன்று முழுவதும் மீன் மார்க்கெட் செயல்படாது என்றும் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story