போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனை
கொரோனாவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
கொரோனாவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் பொள்ளாச்சி பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் கொரோனா குறித்தும், அதை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேரில் ஆய்வு
இந்த வாகன சோதனையை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), விவேகானந்தன் (வால்பாறை) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ஊரடங்கை மீறுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் மற்றும் அந்த போலீஸ் சரக எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி பொள்ளாச்சி, வால்பாறை சரக பகுதிகளில் தமிழக-கேரள எல்லைகளான மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செமனாம்பதி, மளுக்குபாறை, கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, ஜமீன்காளியாபுரம் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
மேலும் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லைகளான அந்தியூர், எஸ்.நாகூர், ரெட்டியாரூரில் சோதனை அமைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர மரப்பேட்டை சந்திப்பு, பல்லடம் ரோடு பைவ் கார்னர், வடக்கிபாளையம் பிரிவு, வடக்கிபாளையம்-நடுப்புணி ரோடு, நெகமம் நால் ரோடு, வஞ்சியாபுரம் பிரிவு ஆகிய இடங்களிலும் தற்காலிகமாக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அவசர தேவைக்கு மட்டும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டும். தேவை இல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story