ஆழியாறு அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள்
தடை உத்தரவை மீறி ஆழியாறு அணைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி
தடை உத்தரவை மீறி ஆழியாறு அணைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆழியாறு அணை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். பூங்கா மற்றும் அணைக்கு செல்லும் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு இருந்தன.
இதனால் பீடர் கால்வாய் வழியாக அணையின் உள்பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது சிலர் அணை மற்றும் பீடர் கால்வாய் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன.
எனவே சுற்றுலா பயணிகள் ஆழியாறுக்கு யாரும் வர வேண்டாம். தடை உத்தரவை மீறி அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க ஆழியாறில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story