45,943 பேருக்கு கொரோனா தடுப்பூசி


45,943 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 April 2021 11:48 PM IST (Updated: 21 April 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 45 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தயார் நிலையில் படுக்கைகள்

சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 521 படுக்கைகள், அமராவதிப்புதூர் காசநோய் மருத்துவமனையில் 72 படுக்கைகளும் உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 இருப்பினும் கூடுதல் நோயாளிகள் வந்தால் சமாளிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிவகங்கை பண்ணை பொறியியல் கல்லூரி மற்றும் திருப்பத்தூர் எஸ்.எம்.ஹெச். மருத்துவமனையில் தலா 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன.பண்ணை கல்லூரியில் 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் கண்ட நபர்களை பரிசோதனை முடிவு கிடைத்த 2 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வட்டார அளவில் டாக்டர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்

மேலும் துணை இயக்குனர் நிலையில் உள்ள அலுவலர்கள் அனைத்து வட்டாரங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த பகுதிகளில் நடைபெறும் கொரோனோ ஒழிப்பு பணிகள், பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல், கட்டுப்பாட்டு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்துதல் போன்றவைகளை ஆய்வு செய்து கலெக்டருக்கு தினமும் அறிக்கை அளிப்பார்கள்..
ஒவ்வொரு வட்டாரத்திலும் 9 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் தினசரி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள், இடம் பற்றிய தகவல்கள், பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்பின் மூலம் முன்னரே தெரிவித்து பொது மக்கள் பயன்பெறும் வகையில் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 27 ஆயிரத்து 219 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி

11 லட்சத்து 77 ஆயிரத்து 796 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம ்45 ஆயிரத்து 943 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்சமயம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story