குமரிக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் வந்தது
குமரி மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் வந்துள்ளன. இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் வந்துள்ளன. இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மே 1-ந்தேதி முதல் 18 வயதை தாண்டியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
140 மையம்
குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 9 அரசு ஆஸ்பத்திரிகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 மினி கிளினிக்குகள், 42 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 140 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வெறிச்சோடியது
பல மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் மருந்துவ பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுமார் 700 டோஸ் தடுப்பூசி இருப்பு உள்ளது. ஆனால் நேற்று தடுப்பூசி போட மக்கள் கூட்டம் இல்லை. ஒருசிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தினமும் 300 முதல் 400 பேர் வரை தடுப்பூசி போட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று தடுப்பூசி போட ஒருசிலர் மட்டும் வந்ததால் தடுப்பூசி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
5 ஆயிரம் தடுப்பூசிகள்
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தன. இதில் 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் குமரி மாவட்டத்துக்கு வர உள்ளன. அதில் முதற்கட்டமாக 5 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று மாலை குமரி மாவட்டம் வந்தன. தடுப்பூசிகளை குமரி மாவட்ட சுகாதாரத்துறையினர் நெல்லைக்கு சென்று வாங்கி வந்தனர். பின்னர் அவை ஒவ்வொரு தடுப்பூசி மையங்களுக்கு பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனை நம்பி நாங்கள் தடுப்பூசி போட ஆஸ்பத்திரிகளுக்கு சென்றால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட மருந்து இல்லை என்று கூறி அனுப்பி வைக்கும் சம்பவம் நடக்கிறது. எனவே தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, அதனை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story