நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,737 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13,737 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 537 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், ஆயுதபடை போலீஸ்காரர், அரசு பஸ் கண்டக்டர், ரேஷன் கடை ஊழியர் உள்பட 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,737 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1,064 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 59 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 561 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் இறந்து விட்ட நிலையில், 1,064 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருநாள் பாதிப்பு 190 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. தற்போது முதல் முறையாக ஒரே நாளில் 200 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story