குமரியில் விடிய, விடிய போலீசார் கண்காணிப்பு
குமரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விடிய, விடிய போலீசார் கண்காணிப்பு
தமிழகத்தில் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே செல்கிறது. இதனைதொடர்ந்து அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கையும் நேற்று முன்தினம் அமல்படுத்தியது.
அதன்படி குமரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு 8 மணி முதல் தீவிர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கிற்கு பொதுமக்கள், கடை வியாபாரிகள் ஒத்துழைக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் தெரிவித்தனர்.
பயணிகள் தவிப்பு
இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும் நேற்று காலை 4 மணி முதல் இயக்கப்பட்டன. உள்ளூர் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இரவு 8 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால், வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகளும், வெளியூர் செல்ல வேண்டிய பயணிகளும் பஸ்கள் இன்றி தவித்து நின்றதை காணமுடிந்தது.
மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலானதும், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்தனர். முக்கிய சந்திப்புகளில் பேரிக்கார்டுகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் விசாரித்து எச்சரித்து அனுப்பினர். மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி, களியக்காவிளை ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் அத்தியவசிய சரக்கு வாகனங்களை மட்டும் அனுமதித்தனர்.
வழக்குப்பதிவு இல்லை
குமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு எதுவும் ஆகவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
குமரியில் இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததும் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் முதல் நாள் இரவு ஊரடங்கில் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை. ஊரடங்கிற்கு மாவட்ட மக்கள் போலீசாரின் அறிவுறையை ஏற்று, முழு ஒத்துழைப்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோல் இனி வரும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரும் முழு ஊரடங்கிற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2-வது நாளாக...
குமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து இரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. கடைகளும் இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் இரவு 9 மணிக்கு மேல் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளும், பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு சில இருசக்கர வாகனங்கள், கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்டி வந்தனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களை இயக்க கூடாது எனவும், எந்த பகுதிக்கு செல்கிறீர்கள்? என்று கேட்டு இனிமேல் இதுபோல் ஊரடங்கு மீறி வாகனங்களை ஓட்டக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு அரசு உத்தரவை மீறி இயக்கப்பட்ட வாகனங்களின் ஓட்டுனர்களை எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story