விராலிமலையில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


விராலிமலையில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x
தினத்தந்தி 22 April 2021 1:16 AM IST (Updated: 22 April 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

விராலிமலை
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா சிதம்பரம் (வயது 54). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கினார். இந்த வீட்டு மனைகளுக்கு தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) பணிபுரியும் புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த தங்கதுரை (36) என்பவரை அணுகினார்.
அதற்கு தங்கதுரை, உட்பிரிவு பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும் அந்த பணத்தை தங்கவேல் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். லஞ்சஒழிப்பு போலீசார் ஆலோசனையின்பேரில் நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை விராலிமலை தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு வைத்து தங்கவேலுவிடம் ராஜாசிதம்பரம் கொடுத்தார். அந்த பணத்தை பெற்ற தங்கவேல், நில அளவையர் தங்கதுரையிடம் கொடுத்தார்.  அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான குழுவினர் தங்கதுரையை கையும்-களவுமாக பிடித்து கைது செய்தனர். தங்கவேலுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story